கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, விவசாயச் சங்கங்களின் சார்பில் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற உள்ள முழு கடையடைப்பு போராட்டத்தை ஆதரிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் செப்டம்பர் 16-ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த முழு கடையடைப்புப் போராட்டத்துக்குத் திமுகவின் ஆதரவினை அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையினை ஏற்று, தமிழகத்தில் நடைபெற உள்ள முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தருவதென திமுக முடிவு செய்துள்ளது.
எனவே, திமுகவினர் அனைவரும் இந்தப் போராட்டத்துக்கு தங்களின் முழு ஆதரவினைத் தந்து, போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.